Published : 06 Apr 2016 11:41 AM
Last Updated : 06 Apr 2016 11:41 AM

பலகீனமான தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படுகிறதா?- கோவை திமுக - காங்கிரஸ் அணிகளில் பரபரப்பு

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து கோவை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 41 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்திருப்பதை தொடர்ந்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய வகையில் 90 தொகுதிகளின் பெயரை குறிப்பிட்டு பட்டியல் ஒன்றை காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையிடம் அளித்துள்ளனர். அதில், காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகளை முழுமையாகப் பட்டியலிட்டுள்ளது. உதாரணமாக, குமரி மாவட்டத்தில் உள்ள 6-க்கு 5 தொகுதிகள் 1977 மற்றும் 1989 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. 2011 தேர்தலிலும் இங்கே 3 தொகுதி ஒதுக்கப்பட்டு 2-ஐ வென்றது காங்கிரஸ். அப்படிப்பட்ட பகுதியில் 6 தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது காங்கிரஸ். கண்டிப்பாக வெற்றி என்ற நிலையில் இருப்பதால் அங்கே காங்கிரஸுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மற்ற தொகுதிகளில் தாமே போட்டியிட திட்டமிட்டுள்ளது.

அதேபோல், கோவை மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதால் அங்கே மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட முயற்சி நடக்கிறது. சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தொழிலாளர்களும், படித்தவர்களும் அதிகம். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளதாகவும் கருதப்படுகிறது. எனவே இதை மட்டும் திமுக உள்ளூர் விஐபிக்கள் 2 பேருக்கு ஒதுக்கி விட்டு மீதியை காங்கிரஸ் மற்றும் வரவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘கோவை மாவட்டத்தில் நாங்கள் பலகீனமாக முன்பு இருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக சீட்டுகள் விஷயத்தில் விட்டுக்கொடுப்பதாக தலைமையிலிருந்து தகவல்கள் இல்லவே இல்லை. கோவை வடக்கு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் முறையே நான்கு மாவட்டச் செயலாளர்களுக்கும், கோவை தெற்கு தொகுதி முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகனுக்கோ, மருமகனுக்கோ, அவருக்கோ என்ற நிலையில் உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 5 தொகுதிகளில் வால்பாறை புதிய தமிழகத்துக்கும், தொண்டா முத்தூர், கவுண்டம்பாளையம் காங்கிரஸுக்கும், கிணத்துக்கடவு, சூலூர் ஆகியவை புதிதாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் கொமதேகவுக்கும் ஒதுக்கப்படலாம் என்பதே இதுவரை எங்களுக்கு தலைமையிலிருந்து கிடைக்கும் தகவல்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x