Published : 20 Apr 2022 06:40 AM
Last Updated : 20 Apr 2022 06:40 AM

தமிழகத்தில் போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார்: ஈரோட்டில் கி.வீரமணி குற்றச்சாட்டு

திராவிடர் கழகம் சார்பில், ஈரோட்டில் நடந்த நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

ஈரோடு: திராவிடர் கழகம் சார்பில், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது

நீட் தேர்வை எதிர்க்க சட்டப்படி அணுகுமுறையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில்தான் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு மசோதாவை, ஆளுநர் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஏன் விலக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு எதிராக, போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார். இதனை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பொது பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசே சட்டம் இயற்றுகிறது. நவீன குலக்கல்வி திட்டம் தான் தேசிய கல்விக் கொள்கையாக கொண்டு வரப்படுகிறது.

தேசிய கல்விக்கொள்கை சட்டம் அரசியல் சட்டத்திற்கே எதிரானது, என்றார்.

நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மேயர் நாகரத்தினம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x