Published : 20 Apr 2022 05:48 AM
Last Updated : 20 Apr 2022 05:48 AM
சென்னை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய போலீஸாரும் தீவிர கண்காணிப்பு மற்றும்வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகவும், அவர்களை பிடிக்க முயன்றபோது போலீஸாரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கத்தியும், கஞ்சாப் பொட்டலமும் இருந்ததாம். இதையடுத்து, இருவரையும் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், இரவில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பிடிபட்டவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(28) என்பதும், இவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், நேற்றுகாலை விக்னேஷுக்கு திடீரெனஉடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, அவரை போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷின் உறவினர்கள், “விசாரணை என்ற பெயரில் போலீஸார் விக்னேஷை அடித்துக் கொன்றுவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குற்றம்சாட்டினர். வலிப்பு ஏற்பட்டதால்தான் விக்னேஷ் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் மர்மமரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை என்ற பெயரில் போலீஸார் விக்னேஷை அடித்துக் கொன்றுவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT