

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படுவதோடு கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே, ஆணையர் இளங்கோவன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று மாநகராட்சியின் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் 2.3 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.87 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி துணை மேயர் ஜி.காமராஜ் பார்வையிட்டு அவற்றை அழிக்க உத்தரவிட்டார். மேலும் தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.