Published : 15 Apr 2016 10:30 AM
Last Updated : 15 Apr 2016 10:30 AM

காளைகள் இல்லாததால் டிராக்டர்களைக் கொண்டு ‘நல்லேர்’: பெரம்பலூர் அருகே விவசாயிகள் நடத்திய விழா

காளை மாடுகள் வழக்கொழிந்துவிட்ட நிலையில் பெரம்பலூர் அருகே டிராக்டர்களைப் பயன்படுத்தி, ‘நல்லேர்’ உழவுப் பணியை விவசாயிகள் தொடங்கினர்.

அறுவடை முடிந்த நிலத்தை அடுத்த சாகுபடிக்கு தயார் செய்யும் வகையிலும், வேளாண்மைக்கு துணை நிற்கும் இயற் கைக் கூறுகளை வழிபடும் விதமாகவும் நல்லேர் என்றும் பொன்னேர் என்றும் காளைகளை ஏரில் பூட்டி தமிழர்கள் பாரம் பரிய முறையில் உழவுப் பணியை விழா போல நடத்தி தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் பொது இடமான கோயில் நிலமொன்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றாகக்கூடி நல்லேர் திருவிழாவை நேற்று நடத்தி னர். ஆனால், இவ்விழாவில் சம்பிரதாயத் துக்குக்கூட காளைகள் பூட்டப்படவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. கிராமங் களிலும் நாட்டு மாடுகள் வழக்கொழிந்து போனதுதான் இந்த நிலைக்கு காரணம்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான தனபால் கூறியபோது, “எனது சிறுவயதில் நல்லேர் பூட்டும் விழாவில், ஒரே இடத்தில் குறைந்தது 30 ஜோடி காளை மாடுகளை ஏரில் பூட்டி உழவுப் பணியைத் தொடங்கு வதைப் பார்க்க முடியும். ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது காளை மாடுகள் அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் ஊடுபயிர்களுக்கான உழ வோட்டம், பருத்தி போன்ற பயிர்களுக்கு இடையே மாடுகளை பூட்டி களை யெடுப்பது போன்றவையும் விவசாயிகள் மத்தியில் குறைந்துவிட்டது. இதுவே, நாளடைவில் ஒட்டுமொத்தமாக பாரம்பரிய மற்றும் நாட்டு மாடுகள் இனத்தை ஒழித்து வருகின்றன” என்றார்.

நல்லேர் உழுதலில் மாடுகள் இடம்பெற வில்லையே தவிர, உழவுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களுக்கு பொட்டு வைத்து, மஞ்சளிட்டு, மாலை அணிவித்து, குடும்பத்தினருடன் பூஜை செய்து, சம்பிரதாயப்படி தானியங் களை விதைத்து புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சி குறையாமல் உழவர்கள் வரவேற் றனர். இதனைத் தொடர்ந்து, வரும் நாட்களில் புழுதி உழவு என்றழைக்கப்படும் கோடை உழவை தங்களின் வேளாண் நிலங்களில் மேற்கொள்ள உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x