Published : 20 Apr 2022 06:32 AM
Last Updated : 20 Apr 2022 06:32 AM

வயலூர் முருகன் கோயிலில் புதிய அர்ச்சகர்களை பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி போராட்டம்: பரம்பரை அர்ச்சகர்கள் எதிர்ப்பு

குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய புதிய அர்ச்சகர். (அடுத்த படம்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பரம்பரை அர்ச்சகர்கள்.

திருச்சி: திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட புதிய அர்ச்சகர்களை பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பிரபு, ஜெயபால் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களை ஏற்கெனவே இங்கு பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்ய அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்தும், அவர்களை பூஜை செய்ய அனுமதிக்கக் கோரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் இணைச் செயலாளர் சங்கர், மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோயில் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, புதிய அர்ச்சகர்கள் கோயிலில் முக்கிய சன்னதிகளில் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையறிந்த பாஜக, விஎச்பி உள்ளிட்ட கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து புதிய அர்ச்சகர்களை பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, புதிய அர்ச்சகர்கள் நியமனத்துக்கு கோயிலில் பணியாற்றி வரும் பரம்பரை அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோயில் உள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘இந்த கோயிலில் 4-வது பரம்பரையாக மொத்தம் 5 அர்ச்சகர்கள் பணியாற்றி வருகிறோம். இதில் 2 பேர் மட்டுமே அறநிலையத்துறையால் பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள். ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும், 2 பேர் 12 ஆண்டுகளாக ஊதியமின்றியும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் புதிதாக இருவரை நியமித்துள்ளது நியாயமல்ல” என்றனர். இதனால் கோயில் வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x