Published : 20 Apr 2022 06:24 AM
Last Updated : 20 Apr 2022 06:24 AM

திருச்சி அமமுக நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்: சசிகலாவை சந்தித்ததால் நடவடிக்கை?

திருச்சி: கடந்த ஏப்.11-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா, அங்கிருந்து காரில் சென்று உத்தமர்கோயில், திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்தார். அதன்பின் முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் சென்றார். இப்பயணத்தின் போது அதிமுக, அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சசிகலாவை வரவேற்றனர்.

இந்நிலையில், அமமுக திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பாலகுமார், முசிறி தெற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், முசிறி நகரச் செயலாளர் ராமசாமி ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி.தினகரன் நேற்று அறிவித்துள்ளார். கடந்த 11-ம் தேதி முசிறிக்கு வந்த சசிகலாவுக்கு வரவேற்பு அளித்ததால், இவர்கள் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சசிகலாவை சந்தித்ததற்காக அதிமுக நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதே காரணத்துக்காக அமமுக நிர்வாகிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x