வாணியம்பாடி அருகே மயான இடத்தை மீட்டு தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
2 min read

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மயான இடத்தை மீட்டுத் தரக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் பீமகுளம் அடுத்த வீரராகவலசை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவை நேரில் சந்தித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயான இடத்தை மீட்டுத் தர கோரிக்கை மனு அளிக்க வேண்டும் எனக்கூறினர்.

ஆட்சியரை சந்திக்க வாய்ப் பில்லை எனக்கூறி அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘வாணியம்பாடி அடுத்த வீரராகவலசை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அருகேயுள்ள ஏரிக்கரையையொட்டியுள்ள காலி இடத்தில் உடல்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வந்தோம்.

இந்நிலையில், கடந்தாண்டு பெய்த கனமழையில் ஏரி முழு கொள்ளளவு எட்டியது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் அருகேயுள்ள மயான இடத்தை எங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, எங்கள் கிராம மக்களின் பயன்பாட்டுக்காக மாற்று இடத்தில் மயானப்பகுதியை ஒதுக்கித்தர வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தோம்.

அதனடிப்படையில், எங்கள் கிராமத்தையொட்டியுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மயான இடம் கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எங்கள் கிராமத்துக்காக ஒதுக்கப்பட்ட மயான இடத்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம்.

ஆனால், ஒரு சில மாதங் களுக்கு பிறகே அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், கோவிந்த சாமி, கவுரம்மாள் மற்றும் ராதா ஆகியோர் மயான இடம் தங் களுக்கு சொந்தமான இடம் என்றும், அதற்கான பட்டா அவர்களிடம் இருப்பதாக கூறி அந்த இடத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது வழியாக யாரும் வரக்கூடாது எனக்கூறி வேலி போட்டுள்ளனர்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மயான இடம் அரசுக்கு சொந்தமான இடம். இதை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, எங்களுக்கு ஒதுக்கி தந்தனர். ஆனால், தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால் ஆபாசமாக பேசுகின்றனர். வருவாய்த் துறையினரும் எங்கள் கோரிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மயான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு எங்களுக்கே தர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்ற அரசு அதிகாரிகள் ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று, வாணியம்பாடி வருவாய்த் துறையினர் மூலம் மீண்டும் இடத்தை அளந்து, ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். இதை யடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in