

உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்தது குறித்த கருணாநிதியின் கேள்விக்கு சேலம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று சேலம் மகுடஞ்சாவடி அடுத்த கூத்தாடி பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை மற்றும் கேரள மாநில அதிமுக வேட்பாளர்கள் 54 பேருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தொழில், பொருளாதார வளர்ச்சி மேம்பட அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தொழில் வசதி மூலம் சமுதாய வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள், பெண் குழந்தைகள் வாழ்வு மேம்படவும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மகளிருக்கான தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மகளிருக்கான தொழில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் காரணமாக 28 சதவீதமாக இருந்த பெண் பட்டதாரிகள், 49 சதவீதமாக உயர்ந்துள்ளனர்.
இதேபோல, மகளிருக்கான பொரு ளாதார சிறப்பு திட்டம், உற்பத்தி பொருள் விற்பனை மையம், தொழில் தொடங்க மானிய கடனுதவி, கைபேசி திட்டம் என பல திட்டங்கள் வகுக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பொறுப்புகளை அளிக்க இடஒதுக்கீடை அதிமுக ஆட்சி அமல் செய்தது. கடந்த 2014-ம் ஆண்டு உள் ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் மகளிருக்கான ஒதுக்கீடு அமல்படுத்தி உத்தரவிட்டேன். வரும் சட்டப்பேரவை தேர்தலை எண்ணியே நான் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதாகவும் ஏன் கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டத்தை அவர் நிறைவேற்றவில்லை என கருணாநிதி கேட்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் எப்பொழுது சட்டம் நிறைவேற்றினாலும், அடுத்து 2017-ம் ஆண்டு வரும் உள்ளாட்சி தேர்தலில்தான் 50 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என்பதைகூட அவர் அறிந்து வைத்திருக்க வில்லை. அதிமுக ஆட்சியில் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது தயவுதாட்சண்ய மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட் டது. நல்லவர்களுக்கு போலீஸார் நண்பர்களாகவும், குண்டர்களுக்கு போலீஸார் எதிரியாகவும் செயல்பட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி வருகின்றனர். தற்போது, தமிழகம் அமைதி பூங்காவாக மாறியுள்ளது.
திமுக ஆட்சியில் வாய்மொழி உத்தரவுபேரில் சாதாரண தொண்டர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை செய் யும் குற்ற நடவடிக்கையை காவலர்கள் நடவடிக்கை எடுக்காத வகையில் தடுத்துள்ளனர். எனவே, சட்டத்தின் ஆட்சியை மலர வைக்க அதிமுக-வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.