

சென்னை: "ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், இன்று காலை தமிழ்நாடு ஆளுநர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதின திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநருக்கு எதிரான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டது.
மேற்படி சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசிற்கு தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினகரன் கண்டனம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறிய ஆளும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது தவறானது. வன்முறை சமூக அமைதியைத்தான் சீர்குலைக்குமே தவிர எதற்கும் தீர்வாக அமையாது. எனவே, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இனி இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பாகும்'' என்று பதிவிட்டுள்ளார்.