Published : 19 Apr 2022 06:08 PM
Last Updated : 19 Apr 2022 06:08 PM

துறையின் பெயர் மாற்றம் முதல் தஞ்சை, உதகையில் 'மினி டைடல் பார்க்' வரை: தமிழக தொழில் துறையின் 25 அறிவிப்புகள்

சென்னை: தொழில் துறையினை 'தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 'ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை' வெளியிடப்படும், சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த 'எத்தனால் கொள்கை 2022' வெளியிடப்படும், 1800 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்குதல், தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அவர் வெளியிட்ட 25 முக்கிய அறிவிப்புகள்:

> தொழில்துறையினை "தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை" என பெயர் மாற்றம் செய்யப்படும்.

> முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்.

> விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

> ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு "ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை" வெளியிடப்படும்.

> சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த "எத்தனால் கொள்கை 2022" வெளியிடப்படும்.

> தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.

> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ஒன்று 1800 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

> கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் குருபரப்பள்ளி தொழிற்பூங்காக்களில் சுமார் 26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

> ஓசூர் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சரக்கு வாகன முனையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

> ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

> தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

> காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்துறை தொழிற்பூங்கா ஒன்று தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலக வீட்டுவசதி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

> தமிழகத்தில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

> தமிழகத்தில் பிரத்யேக சரக்குப் போக்குவரத்திற்கான வழித்தடத்தை (Dedicated Freight Corridor) அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

> வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

> விமானத்தை இயக்கப் பயிற்சி தரும் நிறுவனங்களை (Flying Training Organisation) அமைக்க துணை புரிதல்.

> கோயம்புத்தூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்காக தயாரிப்பிற்கு பிந்தைய செயல்பாடுகளுக்கான அலகு (Post Processing Unit) ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> பிரத்யேக பாதுகாப்பு பூங்காக்கள் (Thematic Defence Parks) சுமார் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> கோயம்புத்தூரில் பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்கா ஒன்று 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 3 சதவீதம் மற்றும் 6 சதவீதம் வட்டிமானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும்.

> அரியலூர் புதிய சிமென்ட் ஆலையில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு ஒன்று (Alternate Fuel Feeding System) 30 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

> அரியலூர் சிமென்ட் ஆலையில் 250 கோடி ரூபாய் செலவில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு (Closed Coal Shed) அமைக்கப்படும்.

> அரியலூர் புதிய சிமென்ட் ஆலையில் உற்பத்தி ஆகும் சிமென்டை பழைய ஆலையின் சிமென்ட் கொள்கலன்களுக்கு (Cement silos) கொண்டு செல்லும் அமைப்பு (Cement Conveying System) ஒன்று 350 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

> ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில் மணிக்கு 80 மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் ஒன்று அதற்குரிய கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x