Published : 19 Apr 2022 05:25 PM
Last Updated : 19 Apr 2022 05:25 PM

கரூரில் திமுக சுவர் விளம்பரம் அழிப்பு: கைதானவர்களை விடுவிடுக்கக் கோரி போராடிய பாஜகவினர் கைது

கரூர்: கரூரில் திமுக சுவர் விளம்பரத்தை அழித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 236 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் கடந்த 14-ம் தேதி பாஜகவின் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினரை திமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகவினர் சாலை மறியல் செய்ததுடன் இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். புகார் அளித்து 5 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் திமுகவின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் போராட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது.

இதில், பாஜக அலுவலகத்தில் இருந்து பாஜகவினர் ஊர்வலமாக புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்த திமுகவின் உதயசூரியன் உள்ளிட்ட விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, விளம்பரங்களை அழித்த 3 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.

இதனைக் கண்டித்து கரூர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருகாம்புலியூர் மேம்பால இறக்கத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவ்வழியே செல்லும் வாகனங்களை போலீஸார் மறியல் நடைபெறும் இடத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். மேலும், போலீஸார் கைது செய்து ஏற்றியிருந்த வாகனம் முன்பும் சாலையில அமர்ந்து பாஜகவினர் மறியல் செய்தனர்.


ஏடிஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன், டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 236 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

பாஜகவினர் மீது திமுக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

திமுக கரூர் மத்திய மாநகர பொறுப்பாளர் கனகராஜ் தலைமையில் திமுகவினர் கரூர் காவல் கண்காணிப்பாளரிடம் இன்று மதியம் மனு அளித்தனர். அதில் 'கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எழுதப்பட்டிருந்த திமுக விளம்பரத்தை பாஜகவினர் அழிக்கும்போது பார்த்து கண்டித்த திமுகவினரை தாக்கியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு திமுக விளம்பரங்களை பாஜகவினர் அழித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x