Last Updated : 19 Apr, 2022 12:42 PM

 

Published : 19 Apr 2022 12:42 PM
Last Updated : 19 Apr 2022 12:42 PM

கஞ்சா விற்றால் கடும் தண்டனை; மாணவர்கள் மீதும் நடவடிக்கை உறுதி: புதுச்சேரி ஐஜி

புதுச்சேரி காவல்துறை ஐஜி சந்திரன்

புதுச்சேரி: கஞ்சாவை குறைந்த அளவே வைத்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி செல்வோராக இருந்தாலும் இந்நடவடிக்கை உறுதியாக இருக்கும் என்று புதுச்சேரி காவல்துறை ஐஜி சந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரிக்கு கஞ்சா அதிகளவில் ரயில்களின் வழியாக வருவதால் வெளி மாநில ரயில்கள் வரும்போது சோதனையை அதிகப்படுத்தவுள்ளோம். போதைப்பொருள் தடுப்புக்காக தனியாக எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். கஞ்சா வழக்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் பல நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

கடந்த 2016ல் 3 வழக்குகளில் கஞ்சா வழக்குக்காக கைது செய்யப்பட்டு 550 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடந்த 2020ல் 36 வழக்குகளாகி 107 கிலோ பறிமுதல் செய்தோம். கடந்த 2021ல் 72 வழக்குகள் பதிவாகி 91 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நடப்பாண்டில் இதுவரை 20 வழக்குகள் போடப்பட்டு 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இனி கஞ்சாவை குறைந்த அளவே வைத்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி செல்வோராக இருந்தாலும் இந்நடவடிக்கை உறுதியாக இருக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்து உரையாடுவது அவசியம்.

கஞ்சா இருந்து கைதானால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டியதாக இருக்கும். எதிர்காலம் பாதிக்க வாய்ப்புள்ளதால் குழந்தைகள், அவர்களின் நண்பர்களை கண்காணிப்பது பெற்றோர் கடமை. கஞ்சா பரவலாக கிடைக்கும் பகுதிகளாக 20 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.

அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப்பொருள் தடுப்பு அமைப்பினை அங்கு முதல்கட்டமாக உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். கஞ்சா, போதைப்பொருள் உள்ளிட்ட எப்பொருள்கள் விற்பனை மற்றும் பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்டவற்றை புகார் செய்ய 112 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் புகார் தர 94892 05039 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். அதேபோல் ரசாயனம் சார்ந்த போதைப் பொருட்கள் பயன்பாடும் உள்ளது. அது சார்ந்த அனைத்துப் போதைப் பொருட்கள் பயன்பாட்டையும் தடுக்கவுள்ளோம்.

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புகார் தர 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். சைபர் க்ரைம் குற்றங்களைத் தடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ், எஸ்.ஐ பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்று சந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x