Published : 19 Apr 2022 03:43 AM
Last Updated : 19 Apr 2022 03:43 AM
சென்னை: மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அமைச்சர் மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார்.
விஷ்வா மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகன் விஷ்வா தீனதயாளன் (18). இளம் டேபிள் டென்னிஸ் வீரரான இவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் 83-வது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக தமிழக வீரர்களான விஷ்வா தீனதயாளன், சந்தோஷ் குமார், கிஷோர் குமார், அபினேஷ் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை வாடகை காரில் குவாஹாட்டியில் இருந்து ஷில்லாங்குக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஷாங்பங்களா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிரெய்லர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீரர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விஷ்வா தீனதயாளன் உள்ளிட்ட 4 பேரும் மீட்கப்பட்டு வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு விஷ்வா தீனதயாளனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 வீரர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஷ்வா உடல் சாலை வழியாக கவுகாத்திக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானத்தில் நேற்று பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தது. விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் விஷ்வாவின் பயிற்சியாளர்கள், உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.
பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாநகர் இல்லத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பெற்றோர், பயிற்சியாளர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார். அண்ணாநகரில் உள்ள சுடுகாட்டில் இன்று காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.
விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளை படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகை யில் விஷ்வா தீனதயாளன் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தர விட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
விஷ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித் துள்ள ஹரியாணா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேகலயா முதல்வரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங் கியதும், டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவு குறித்து அவைக்கு தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்,அழகிரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் விஷ்வா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவர்: விஷ்வா தீனதயாளன் லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 2015-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த 77-வது தேசிய அளவிலான கேடட் மற்றும் இளநிலை பிரிவு போட்டியில் முதலிடத்தை பெற்றார். 2017-ம் ஆண்டு டெல்லியில் நடந்த 62-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3-வது இடம் பெற்றார். கடந்த ஜனவரியில் தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார்.
ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ள இளையோர் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT