Published : 19 Apr 2022 05:13 AM
Last Updated : 19 Apr 2022 05:13 AM

நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கையை பொருத்து அனைத்துக்கட்சி கூட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தொடர்பான ஆளுநரின் நடவடிக்கையை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: "ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதா, கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கிற தேநீர் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டப்பேரவை மாண்பை மேலும் சிதைப்பதாகவும் அமைவதாலேயே அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதி, அதில் அதற்கான விவரங்களை விரிவாக தந்துள்ளேன்.

தனிப்பட்ட விரோதம் இல்லை:ஆளுநருடன் எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், முதல்வரான எனக்கும் மிக சுமுகமான உறவு உள்ளது. நேரில் பேசும் போது இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டியுள்ளார். ஆளுநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எங்களுக்கு அதிக மரியாதை தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்; தொடர்ந்து அளிப்போம்.

தனிப்பட்ட முறையில் எனக்குகிடைக்கக்கூடிய பாராட்டுகளைவிட தமிழகத்துக்கு கிடைக்கும்நன்மையும், பலனுமே முக்கியமானது. பேரவையின் மாண்பை, தமிழக மக்களின் உணர்வை மதித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. அது, இந்த பேரவையின் மாண்புக்கு விரோதமானதாகும். தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

கடந்த 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோவலிகள், அவமானங்களை சந்தித்து வந்துள்ளேன். அது எனக்கு ஒருபொருட்டல்ல. புகழ்ச்சிகள், பாராட்டுரைகளை புறந்தள்ளி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று செயல்படுகிறேன். பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை என்பதே அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நான் கற்றுக்கொண்ட பாடம். அந்தவழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்.

ஒட்டுமொத்த உணர்வு: தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கும் நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நூற்றாண்டு கண்ட பேரவையின்மாண்பை காக்கும் பொறுப்பும் ஒரு முதல்வராக என்னுடையது என்று புரிந்து கொண்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.தமிழக மக்களின் உணர்வுகளை அனைத்து மன்றங்களிலும் தொடர்ந்து எதிரொலிப்போம்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்து, இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், நீட்விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அது தொடர்பான நடவடிக்கையை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் பேரவையின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x