Published : 19 Apr 2022 08:27 AM
Last Updated : 19 Apr 2022 08:27 AM
விழுப்புரம்: கூவாகம் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சாதனா ‘மிஸ் திருநங்கை’யாக தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (ஏப்.19) நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருநங்கைகள் அரவாண் சுவாமிக்கு பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு வழிபடுவர். தொடர்ந்து அரவாண் களப்பலியும், நாளை (ஏப்.20) காலை தேரோட்டமும் நடைபெறும்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்துக்கு வந்துள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் மாலை விழுப்புரத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின.
இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் திருச்சி சிவா, ரவிக்குமார், எம்எல்ஏக்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, நடிகர் சூரி, நடிகை நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மிஸ் திருநங்கைக்கான அழகிப் போட்டியில் 150 திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில், சென்னையை சேர்ந்த மதுமிதா 2-ம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த எல்சா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 2-வது இடம் வந்த மதுமிதாவுக்கு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற எல்சாவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முக்கிய நிகழ்ச்சியான ‘மிஸ் கூவாகம் 2022’ போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், விழுப்பு ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் போட்டிக்கு வருகை புரிந்தவர்களை கங்கா நாயக், மோகனாம்பாள் நாயக் உள்ளிட்டோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவர் வாகை சந்திரசேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘மிஸ் கூவாகம்’ போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT