விலை சரிவால் கால்நடைகளுக்கு உணவாகும் கேரட்: நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலை

விலை சரிவால் கால்நடைகளுக்கு உணவாகும் கேரட்: நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலை
Updated on
1 min read

உதகை: விலை சரிவடைந்து கடும் நஷ்டம் ஏற்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள், கேரட்டை கால்நடைகளுக்கு உணவாக கொட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில், கேரட் 2,200 ஹெக்டேரிலும், உருளைக்கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும், மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

இவற்றில் மிக முக்கியப் பயிராக இருப்பது கேரட். ‘ஆரஞ்சு கோல்டு' எனப்படும் இந்த கேரட்விற்பனையை நம்பி நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம்பேர் இருக்கின்றனர். அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. கடன் பெற்று சில சிறு விவசாயிகள் கேரட் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், அறுவடை செய்த கேரட் பயிரை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான செலவு கூட கிடைக்காததால், கால்நடைகளுக்கு உணவாக கேரட்டை சாலைஓரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

இதுகுறித்து கேரட் விவசாயிகள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.25 முதல் ரூ.45-க்கு விற்பனையாகிறது. இதனால், கடும் நஷ்டம் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அழுகிவிடும். இதனால் வேறு வழியின்றி சாலையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in