

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை திமுக மட்டுமே வெளியிட்டுள்ளதாக மதுராந்தகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செய்யூர் தொகுதி வேட்பாளர் அரசுவை ஆதரித்து, பிற்பகல் 3 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின், சோத்துப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் அரசு செலவில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக 2.6 கோடி மரக்கன்றுகள் நடுவதற்காக, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், நெம்மேலியில் ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது” என்றார்.
பின்னர், மதுராந்தகம் வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட்டுள்ள ஒரே கட்சி திமுக மட்டும்தான். திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விவசாயிகளின் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு உயர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தனிநபர் வருமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் பணம் இருந்தால் மட்டுமே கவுன்சிலர், எம்எல்ஏ ஆகியோரை பொதுமக்கள் சந்திக்க முடியும்” என்றார்.
இதைத்தொடர்ந்து, உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருப்போரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.