

திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சியில் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு தங்கி படிக்கும் மாணவர்களுடன் இணைந்து பெற்றோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது, ‘‘புதூர்நாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏகலைவா பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கூட இல்லை. வகுப்பறையில் அமர போதுமான நாற்காலிகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே, இதையெல்லாம் கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.
அவர்களிடம் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.