Published : 18 Apr 2022 04:03 PM
Last Updated : 18 Apr 2022 04:03 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 217 பேரிடம் விசாரணை: காவல்துறை தகவல் 

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக இதுவரை 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அம்மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்து, மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தாங்கள் குறிப்பிடும் அனைவரையும் விசாரிக்க அனுமதி வழங்க கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.அதில், "எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. மேலும் மாயமான பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசி ஆகியோருக்குத்தான் தெரியும். இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டனர்" என்று கூறியிருந்தனர்.

அப்போது தமிழக காவல்துறை தரப்பில், "வழக்கில் மேல் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் யாரை விசாரிக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரிய தீபுவின் கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஏற்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மேல் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x