Published : 18 Apr 2022 05:43 AM
Last Updated : 18 Apr 2022 05:43 AM
சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த 25 மாவட்டங்களில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளன. கடந்தஆண்டு டிச.7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடத்தப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்டங்களின் கிளை, பேரூராட்சி வார்டு, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை, கோவை, திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், நாமக்கல்,தென்காசி, கரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்டஅமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு 2-ம் கட்டமாக கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான தேர்தல் பொறுப்பாளர்கள், ஆணையர்களாக பிற மாவட்டங்களை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 25 மாவட்டங்களில் ஒருமனதாக தேர்வான ஒன்றிய, நகர,பேரூராட்சி, பகுதி கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அறிவித்துள்ளனர்.
திருச்சி, மதுரை, பெரம்பலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு 3-ம் கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றுதெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT