266-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உதயநிதி எம்.எல்.ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உதயநிதி எம்.எல்.ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர்.
Updated on
1 min read

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் தீரன் சின்னமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தீரன் சின்னமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவுத் தூண் அமைந்துள்ள இடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கும் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக பாஜக சார்பில் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தலைமையிலும், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையிலும், தமாகா சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த வீரத்துக்கும், தீரத்துக்கும் சொந்தக்காரரான தீரன்சின்னமலையின் 266-வது பிறந்த நாளில் தாய் மண்ணையும், மக்களையும் காக்க தீரத்துடன் போரிட்ட அவரது வீரத்தை போற்றுவோம். அவரது வரலாற்றை பாடநூலில் சேர்க்க வலியுறுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அசராமல் போர்புரிந்து வெற்றிகளை குவித்த பெருமகனாக, சமூக நல்லிணக்கம் போற்றிய ஆட்சியாளராக, அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்றவராக திகழ்ந்த தீரன் சின்னமலையின் தியாகத்தையும், வீரத்தையும் எந்நாளும் போற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in