Published : 18 Apr 2022 06:22 AM
Last Updated : 18 Apr 2022 06:22 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாஜக மாநில துணைத் தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மற்ற நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பாஜகவினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மண்டலத் தலைவர்களிடம் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் நகர பாஜக அலுவலகத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்து அமைப்புகளின் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கேரளாவில் தொடர்ந்து வன்முறைகளும், கொலைகளும் நிகழ்ந்து வருவதன் அடிப்படையில், இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டால், தமிழக பாஜகவினருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அடிப்படையில் பாதுகாப்புடன் இருக்கும்படி மாநிலத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “பாஜக மாநிலத் தலைவரின் ஆடியோ வெளியானதைஅடுத்து, பாஜக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT