

கோவை: கோவை வாலாங்குளத்தில் தமிழக சுற்றுலாத்துறையும், கோவை மாநகராட்சியும் இணைந்து படகுகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக பாரம்பரிய நடன ஓவியங்களின் புகைப்படங்களை நேற்று திறந்துவைத்த பின், அமைச்சர் மா.மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை சர்வதேச விமானநிலையத்துக்கு வருகைபுரியும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளிடையே, தமிழக பாரம்பரிய நடனங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் நோக்கில், அவற்றின் புகைப்படங்கள் மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பாரம்பரிய நடனங்களை தெரிவிக்கும் விதமாக கரகாட்டம், மயிலாட்டம், புரவிஆட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், தெருக்கூத்து மற்றும் காவடியாட்டத்தின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மேகமலை, வால்பாறை, ஆழியாறு அணை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலாத் தலங்களான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், கங்கைகொண்டசோழபுரம், ஆதியோகி சிலை, ரங்கம் ரங்கநாதர் கோயில், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தனுஷ்கோடி, பாம்பன் பாலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் விமானநிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் இதேபோன்று சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கோவை வாலாங்குளத்தில் தமிழக சுற்றுலாத்துறையும், கோவை மாநகராட்சியும் இணைந்து மக்கள் சவாரிக்காக படகுகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுற்றுலா, பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன், விமானநிலைய இயக்குநர் செந்தில்வளவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.