ஓசூரில் எம்.சாண்ட், ஜல்லிக் கல் ஏற்றிச் செல்லும் அதிவேக டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம்

ஓசூரில் எம்.சாண்ட், ஜல்லிக் கல் ஏற்றிச் செல்லும் அதிவேக டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம்
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக் கல் ஏற்றிச் செல்லும்டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் இருப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் வட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் உள்ளன. இக்குவாரிகளில் இருந்து கட்டிடம் கட்டுவதற்கு தேவையான ஜல்லிக் கல் மற்றும் எம்.சாண்ட் (தயாரிப்பு மணல்) ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை டிப்பர் லாரிகளில் தமிழக நகரங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் ஓசூர், பாகலூர் வழியாக பெங்களூரு நகருக்கு செல்கிறது. ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகியவை டிப்பர் லாரிகளில் அதன் கொள்ளளவை மீறி நிரப்பப்படுகிறது. இதனால், லாரிகள் அதிவேகமாக செல்லும்போதும், சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போதும் லாரியில் இருந்து ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகியவை சாலையில் கொட்டுகிறது.அந்த நேரத்தில் லாரியின் பின்னால் செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களின் மணல், ஜல்லி துகள்கள் விழுவதால் சிரமத்துக்குள்ளாவதும், சாலையில் கொட்டியுள்ள எம்.சாண்ட், ஜல்லி கற்களின் குவியலில் வாகனங்கள் சிக்கி விபத்துக்களும் நேரிடுகிறது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் நகரை ஒட்டியுள்ள மத்திகிரி உள்ளிட்ட நகர சாலைகளில் இடைவெளியின்றி 24 மணி நேரமும் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பாதசாரிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மத்திகிரி அருகே இரு நாட்களுக்கு முன்னர் டிப்பர் லாரி மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். எனவே, டிப்பர் லாரிகளில் அளவுக்கு மீறி ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றிச் செல்வதை தடுக்கவும், டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in