

சென்னை: மத்திய அரசு திட்டங்களில் சாலையோர வியாபாரிகளின் குடும்பங்களை இணைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரோனா ஊரடக்கு காரணமாக பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்காக, பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டம் மூலம் பிணையில்லாத வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.59 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ.161 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 29,706 வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2014-ல், சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல்) சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதன்படி 2015-ல், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல்) விதிகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் துணை விதிகளும் உருவாக்கப்பட்டன.
அதில், அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாநகராட்சி கட்டிடங்கள், தீயணைப்பு நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இருந்து 10 மீட்டர் நீளத்துக்கு கடைகளை வைக்க அனுமதி இல்லை. மேலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 50 மீட்டர், நகர்ப்புறங்களில் உள்ள ரயில் கடவுப்பாதையின் இரு பக்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 30 மீட்டர் நீளம் வரை சாலையோர கடை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
துணை விதிகளின்படி சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி அடையாளம் காணும் பணி கடந்த 2018-ல் நடைபெற்றது. அதில் 39,217 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி பதியும்போது, 27,195 பேர் மட்டுமே பதிவு செய்ய முன்வந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
905 இடங்களில் அனுமதி
இந்த சட்ட விதிகளின் கீழ் மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், மண்டல அலுவலர்கள் தலைமையில், சாலையோர வியாபாரிகள் உறுப்பினர்களாக கொண்ட நகர விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் மூலம் மண்டல வாரியாக மொத்தம் 905 இடங்கள் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதிகளாகவும், 4 ஆயிரத்து 700 இடங்கள் சாலையோர வியாபாரம் தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பிரதமரின் ஸ்வாநிதி சே சம்ரிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினரை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார், வங்கிக் கணக்கு, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, மத்திய அரசு திட்டங்களான பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீடு திட்டம்), பிரதமரின் சுரக்சா பீமா யோஜனா (விபத்து காப்பீடு திட்டம்), பிரதமரின் ஜன் தான் யோஜனா (குறைந்தபட்ச இருப்பு இன்றி வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்), கட்டுமான தொழிலாளர் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஓய்வூதிய திட்டம்), ஓரே நாடு- ஒரே ரேஷன் திட்டம், ஜனனி சுரக்சா யோஜனா (கர்ப்பிணித் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள் ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம்), பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா (கர்ப்பிணிகளுக்கு பிரசவ நிதியுதவி வழங்கும் திட்டம்) ஆகிய 8 திட்டங்களின் கீழ் குடும்ப உறுப்பினர்களை பயனாளிகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை மாநகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க மாநகராட்சி அலுவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.