Published : 18 Apr 2022 07:43 AM
Last Updated : 18 Apr 2022 07:43 AM
சென்னை: வாசகர்களை யார் யோசிக்க, சிந்திக்க வைக்கிறாரோ அவரே உண்மையான படைப்பாளி என மா.அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பெருமிதமாகப் பேசினார்.
பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுள் அடக்கி கவிதை, சிறுகதை, நாவல், கதைகள் என படைப்பின் அனைத்து தளங்கள் பற்றிய தீர்க்கமான பார்வை கொண்ட தனித்துவ படைப்பாளி மா. அரங்கநாதனின் நினைவைப் போற்றும் வகையில் இலக்கிய விருதுகளை முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் மா.அரங்கநாதனின் மகன் உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இலக்கிய துறைக்கு பல்லாண்டுகளாக பங்களிப்பை ஆற்றி வரும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது மற்றும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கும் விழா அண்ணா சாலை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
விழாவில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் தேவார இறை வணக்கம் பாட, கவிஞர் அகரமுதல்வன் வரவேற்றார். ‘காலங்களுக்கிடையில் மா.அரங்கநாதன்’ என்ற தலைப்பில் பெங்களூரு கிறித்து நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பழனி. கிருஷ்ணசாமி உரை நிகழ்த்தினார். விருதாளர்களை ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். விழாவில், ‘இந்திய இலக்கிய சிற்பிகள்: மா.அரங்கநாதன்’ என்ற நூலை வெளியிட்டு, குடவாயில் பாலசுப்பிரமணியன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு இலக்கிய விருதுகளை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசும்போது, “கலை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறையில் ஆராய்ச்சி கண்ணோட்டம் உடையவை மா.அரங்கநாதனின் படைப்புகள்.
அதில் சிறந்த படைப்பு அவரது மகன் அரங்க.மகாதேவன். கவிதைகளையும், படைப்புகளையும் அனுபவித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளரின் பங்களிப்பு ஒரு சதவீதம் என்றால் எஞ்சிய 99 சதவீதத்தை வாசகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 99 சதவீதத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால் நல்ல படைப்பு இல்லை என முத்திரை குத்தி விடுகின்றனர். வாசகர்களை யார் யோசிக்க, சிந்திக்க வைக்கிறாரோ அவரே உண்மையான படைப்பாளி.
இலக்கிய உலகுக்கு புதிய பரிணாமங்களை, நவீனத்தை, வாழ்வியலை, தெளிவான பாதையை அளித்தவர் மா.அரங்கநாதன்” என புகழாரம் சூடினார். விழாவில் பங்கேற்றவர்களை நீதிபதி அரங்க.மகாதேவன் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்தார். குடவாயில் பாலசுப்ரமணியன், டிராட்ஸ்கி மருது ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கவிஞர் சண்முகம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT