

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி தேவி, பூதேவியுடன் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சித்திரை பவுர்ணமி நாளில் வரதராஜ பெருமாள் கோயிலில் ஐயங்கார் குளம் பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை. தமிழக அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக நடப்பாண்டு நடவாவி உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நடவாவி கிணற்றில் எழுந்தருள்வதற்காக, கடந்த 15-ம் தேதி இரவு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டார். இதில், சித்தி விநாயகர் பூந்தோட்டம், செவிலிமேடு, தூசி, வாகை, நத்தக்கொல்லை, அப்துல்லாபுரம் ஆகிய கிராமப் பகுதிகளின் வழியாகச் சென்று ஐயங்கார் குளம் பகுதியில் உள்ள சஞ்சீவிராயர் கோயிலை அடைந்தார். முன்னதாக வழியில் மண்டகப்படி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழுக்கமிட்டனர். பின்னர், சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்து கிணற்றிலிருந்து வெளியே வந்து பாலாற்றுக்குச் சென்றார். அங்கு, ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிக்கு பிரம்ம ஆராதனம் நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை வரதராஜ பெருமாள் கோயிலை வந்தடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.