மகன்களால் கைவிடப்பட்ட மூதாட்டியை இறுதிநாள் வரை பராமரிக்க தஞ்சை மேயர் உறுதி

மகன்களால் கைவிடப்பட்ட மூதாட்டியை இறுதிநாள் வரை பராமரிக்க தஞ்சை மேயர் உறுதி
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சொத்து பிரச்சினை காரணமாக 70 வயது மூதாட்டி ஞானஜோதியை அவரது 2 மகன்களும் ஒரு வீட்டில் பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், போதுமான உணவு, தண்ணீர் வழங்கப்படாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஞானஜோதி வீட்டுக்குள் தரையிலுள்ள மண்ணை தின்று வந்துள்ளார். இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, மூதாட்டி ஞானஜோதி மீட்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானஜோதியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேற்று சந்தித்து, பழங்களை வழங்கி, ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஞானஜோதியின் உடல்நிலை சரியான பிறகு எங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். அவரை தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் வைத்து, அவரது இறுதிநாள் வரை பத்திரமாக பராமரிப்போம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in