

சேலம் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் மாட்டு வண்டியில் பிரச்சாரம் தொடங்கிய பாஜ கட்சி வேட்பாளர் உள்ளிட்டோர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சேலம் தெற்கு தொகுதிக்கு அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சேலம் தெற்கு தொகுதியில் பாஜக-வினர் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினர். குகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் பாஜக-வினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கை காரணமாக, சேலத்தில் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பாஜக-வினர், சேலம் மாநகர சாலைகளில் மாட்டு வண்டியைத்தான் ஓட்ட முடியும் என்றுகூறி, மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சேலம் திருச்சி மெயின்ரோடு, கருங்கல் பாளையம் பகுதி, தாதகாப்பட்டி கேட் ஆகிய இடங்களில் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் பங்கேற்றனர்.
இதனிடையே, பாஜக-வினர் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் கூறியதாவது:
சேலம் குகை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான அனுமதியை பெற, இணையதளத்தில் முயற்சி செய்தபோது, குகை பகுதி தேர்தல் ஆணைய வலைதளத்தில் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் பலமுறை முயற்சி செய்தும் இணைய தளம் மூலமாக அனுமதி பெற முடியவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக-வினர் தேர்தல் அனுமதி பெற்றார்களா? என்பது குறித்து சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும். பிரச்சாரத்துக்கான அனுமதியை இணைய தளத்தில் பதிவு செய்து பெற முடியாவிட்டால், நேரில் அனுமதி பெற்ற பின்னர்தான் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.
பாஜக-வினர் பிரச்சாரம் குறித்து தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகள் உள்ளிட்டோரின் அறிக்கை பெற்று, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.