Published : 08 Apr 2016 05:23 PM
Last Updated : 08 Apr 2016 05:23 PM

திருவண்ணாமலையில் அதிமுக, திமுகவுக்கு சிம்ம சொப்பனம் யார்?- களத்தில் இறங்கும் பாமக, மநகூ

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவும் திமுகவும் பலம் வாய்ந்த கட்சிகளாக வலம் வருகின்றன. அவர்களுக்கு ஈடுகொடுக்கப் போவது தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியா அல்லது பாமகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக

தங்கள் சமுதாய வாக்குகளைப் பெரும்பான்மையாக பெறவேண்டும் என்ற அடிப்படையில் பாமகவினர் பணியாற்றி வருகின்றனர். மேலும், திண்ணைப் பிரச்சாரங்களிலும் அவர்களது கவனம் உள்ளது. மதுவுக்கு எதிரான முழக்கத்தை முன்னிலைப்படுத்தி பெண்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். கிராமப்புற இளைஞர்களை வாக்குவங்கியாக மாற்றுகின்றனர்.

பாமகவுக்கு செல்வாக்குள்ள கிராமங்களில் காடுவெட்டு குரு மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள் சமுதாயத்தின் பெரியவர்களை சந்தித்து, அவர்கள் மூலம் ஆதரவு திரட்டுகின்றனர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தேமுதிக-மநகூ

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பதால், தி.மலை மாவட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியினர் பரபரப்பின்றி உள்ளனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என்று தெரிகிறது. மீதமுள்ள 4 தொகுதிகளை, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நால்வர் அணியினர் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, ‘இந்தத் தேர்தலில் வெற்றி என்ற இலக்குடன் பாமக செயல்படுவதாகக் கூறினாலும், அவர்களது இலக்கு 2021-ல் நடைபெறக்கூடிய தேர்தல்தான். அதற்காக இந்த தேர்தலை, அவர்கள் அடித்தளமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், வாக்குவங்கி வலிமையை வெளிப்படுத்துவதே, அவர்களது பயணத்தின் நோக்கம். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கணிசமான வாக்குவங்கி உள்ளது. அதனால்தான், 8 தொகுதிகளில் முன்னணி நிர்வாகிகளை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளனர். அதாவது, பாமகவினர் மற்றும் மக்களிடம் அறிமுகமான நபர்களை களம் இறக்குகின்றனர். அதன்மூலம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என்பது பாமக தலைமையின் திட்டமாகும்.

தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி களம் இறங்கும். அந்த அணியில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்குவங்கி உள்ளது. புதிய வாக்காளர்கள் தங்களுக்கே வாக்காளிப்பாளர்கள் என்ற நம்பிக்கை தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக்கு நிறையவே உள்ளது. இந்த அணியினர் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே அள்ளுவார்களா? என்பதை அவர்களது களப் பணியே தீர்மானிக்கும். திருவண்ணாமலையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கப் போவது யார் என்பதும் தேர்தல் களத்திலேயே தெரிந்துவிடும்’’ என்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x