

கோவில்பட்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. இதுவரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை அக்கட்சி வென்றுள்ளது. இருப்பினும் இம்முறை கோவில்பட்டியை மதிமுகவுக்கு உறுதியாக கேட்டுப் பெற்றுள்ளார் வைகோ. இத்தொகுதியில் அவரே போட்டியிட விரும்புவதால்தான், தாங்கள் தொகுதியை விட்டு கொடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மக்கள் நலக்கூட்டணியின் 5-ம் கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை கோவில்பட்டியில் நடத்தியது, விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் கோவில்பட்டியில் வைகோ கலந்து கொண்டது போன்றவை, இத்தொகுதியை வைகோ குறிவைப்பதையே காட்டுகிறது என்கின்றனர்.
வைகோ போட்டியிட்டால், கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.