Published : 07 Apr 2016 10:00 AM
Last Updated : 07 Apr 2016 10:00 AM

எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை

எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சந்திரகுமார் தலைமையில் 10 நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விஜயகாந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவர்களின் கருத்துகளை விஜயகாந்த் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனகை முருகேசன், பார்த்தசாரதி, சுபா, மனோகரன், பாஸ்கர், நல்லதம்பி மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். தேமுதிக பிரச்சாரக் கூட்டங்கள், தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விஜயகாந்த் விவரம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் கு.நல்லதம்பி எம்எல்ஏ கூறும்போது, ‘‘விஜயகாந்த் எப்போதும்போல மகிழ்ச்சியுடன் உள்ளார். தேர்தல் பணிகள் குறித்து எங்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்’’ என்றார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான அனகை முருகேசன், சந்திரகுமார் அணியில் சேரப் போகிறார் என்று நேற்று காலை தகவல் பரவிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில், அவர் காலை 11 மணியளவில் தேமுதிக அலுவலகத்துக்கு வந்து விஜயகாந்தை சந்தித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நான் சந்திரகுமாரை பார்க்கப் போகிறேன் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே கட்சியில் உள்ளேன். சொல்லப்போனால், இப்போது இருப்பதிலேயே சீனியர் நான்தான். ஈரோட்டில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் நகர பொருளாளராக இருந்த சந்திரகுமாரை, ராமு வசந்தனிடம் சொல்லி நான்தான் அவைத் தலைவராக ஆக்கினேன். அப்படி இருக்கும்போது, சந்திரகுமார் பின்னால் ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனது கட்சி தேமுதிக. என் ரத்தத்தில் ஓடுவது தேமுதிக கொடி. விஜயகாந்தின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டே நடப்பேன். திமுகவின் சூழ்ச்சியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சந்திரகுமார் போனால், 100 சந்திரகுமார்கள் வருவார்கள். தேமுதிகவில் இருந்து விலக வேண்டி திமுகவினர் யாரும் என்னுடன் பேசவில்லை. நான் விஜயகாந்தின் உண்மை விசுவாசி என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் ம.ந.கூட்டணி - தேமுதிக அணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால், பல்வேறு மாநகராட்சிகளில் பிரேமலதாவின் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து வருவதாலும், தேர்தல் பணிகளில் தேமுதிகவினர் ஈடுபட்டு வருவதாலும் வேறொரு நாளில் நிர்வாகிகள் அனைவரையும் வரச் சொல்லி ஆலோசனை நடத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x