Last Updated : 17 Apr, 2022 11:29 AM

 

Published : 17 Apr 2022 11:29 AM
Last Updated : 17 Apr 2022 11:29 AM

எனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று  சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்: முத்தரசனுக்கு ஆளுநர் தமிழிசை சவால்

புதுச்சேரி: எனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று முத்தரசனை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளியைில் ‘‘சித்திரை முழு நிலவொளியில் கூடுவோம்-விருந்துண்போம், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவோம்’’ நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர், அரசுத்துறை அதிகாரிகள், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து வாழ்த்து கூறினார். பதிலுக்கு அவர்களும் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் விருந்நளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘‘சித்திரை முழு நிலவில் கூடி கூட்டாஞ்சோறு உன்கின்ற பழக்கம் இருந்தது. தமிழ் பழக்க வழக்கங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். தமிழ் எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும். தமிழர்களின் பெருமை எல்லாவிதத்திலும் நிலை நிறுத்தப்பட வேண்டும்.’’ என்றார்.

அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் ‘‘தனிப்பட்ட விருந்தில், அன்பான அழைப்பில் அரசியலை கலப்பது நமது தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. நான் ஒரு சகோதரியாக, தமிழர் விழாவை கொண்டாட அழைப்பு விடுத்தேன்.

எந்தவிதத்திலும் எனது அதிகாரத்தை நான் பயன்படுத்தியது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதிகாரத்தை நான் கையில் எடுத்துள்ளேன் என்று கூட ஒருசில கட்சியினர் போராடியுள்ளனர்.

முதல்வரிடம் நீங்கள் கூட கேட்கலாம், அவர் சுதந்திரமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எந்தவிதத்திலும் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. சகோதரத்துவத்தோடு சிறப்பாக புதுச்சேரியில் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். காரணம் இல்லாமல் புறக்கணிப்பது, அரசியலை புகுத்துவது தேவையில்லை.

எல்லோரும் தமிழர் என்ற முறையில் ஒன்றிணைவோம். என்னைப் பொருத்தவரையில் நான் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. தெலுங்கானா, புதுச்சேரி இரண்டு மாநிலத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சூப்பர் முதல்வராக செயல்படுவதாக முத்தரசன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ‘‘முத்தரசனுக்கு என்ன தெரியும். அவர் புதுச்சேரியில் இருக்கிறாரா? புதுச்சேரியை தினம் தினம் பார்க்கிறாரா? அவர் தமிழகத்தில் இருக்கிறார். இங்கு நடப்பது அவருக்கு என்ன தெரியும்.

சூப்பர் முதல்வர் அல்ல நான், சூப்பராக செயல்படுகிறேன். பாஜக தலைவர்களையே நான் பார்ப்பதில்லை. நான் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம். தமிழகத்தைச் சேர்ந்தவர் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்து கொண்டிருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை.

திறமையின் அடிப்படையில் தான் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். தமிழிசைக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசனை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். என்ன திறமை இல்லை என்பது குறித்து நான் விவாதிக்க தயார். எந்த மாநிலத்திலும் பிரச்சினை இல்லாமல் செயல்பட்டு வருகிறோம்.

புதுச்சேரிக்கு வந்து ஏதையோ ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொல்கின்றனர். தமிழிசை மென்மையானவள், இரும்புப் பெண்மணி. ஆகவே என்னை வாயில்போட்டு மெல்ல முடியாது. இரண்டு மாநிலத்தையும் தாய்மை உள்ளத்தோடு தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதிகார உணர்வோடு பார்க்கவில்லை’’ இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

காங்கிரஸ்-திமுக புறக்கணிப்பு:

ஆளுநர் மாளிகையில் நடந்த சிந்திரை முழுநிலவு விருந்தோம்பல் நிகழ்ச்சியை எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. ஆளுநரின் செயல்பாடு பாஜகவின் கொள்கைகளை புதுச்சேரியில் அமல்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் இந்நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சிவா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சிபிஐ மாநில செயலாளர் சலீம் ஆகியோர் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x