Published : 16 Apr 2016 08:28 AM
Last Updated : 16 Apr 2016 08:28 AM

திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கருணாநிதி வீடு முற்றுகை; தீக்குளிக்க முயற்சி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி கடந்த 13-ம் தேதி வெளியிட்டது. இதில் சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு முயற்சி என அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாரை மாற்றக்கோரி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், ஏ.பி.நந்தகுமார், வேலூர் தொகுதி வேட்பாளர் ப.கார்த்திகேயன், முன்னாள் எம்பி முகமது சகி ஆகியோரைத் தாக்கினர். இந்நிலையில், நேற்றும் பல இடங்களில் வேட்பாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டம் அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத் தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம்.மைதீன்கானை மாற்றக் கோரி திமுக தலைவர் கருணா நிதியின் வீட்டை அக்கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் மைதீன்கானின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, கட்சியினரை மதிப்பதில்லை என அவர் மீது புகார் தெரிவித்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்னை கோபால புரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். மைதீன் கானை உடனடியாக மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் திமுக தலைவர் கருணாநிதியிடம் மனு ஒன்றையும் அவர்கள் அளிக்க முயன்றனர். ஆனால், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

சோழிங்கநல்லூர்

சென்னை புறநகர் தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளராக அரவிந்த் ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினர். இவரை மாற்றக் கோரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கத்தில் நேற்று நூற்றுக் கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுரு கனின் பரிந்துரையின் அடிப்படையில் அரவிந்த் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

சீர்காழி

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கிள்ளை ரவீந்திரனை மாற்றக்கோரி கொள்ளிடத்தில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்ட சிறுபான் மைப் பிரிவு செயலாளர் சையது தலைமையில் 200-க்கும் மேற்பட் டோர் ரயில் நிலையத்திலிருந்து கடைவீதி வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி

இதேபோல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜோலார்பேட்டை வேட்பாளர் கவிதா தண்டபாணியை மாற்ற வலியுறுத்தி வேலூர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, 2 பேர் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர்.

பவானி

ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுள்ள குறிஞ்சி சிவக்குமாரை மாற்ற வேண்டுமென மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக விவசாய அணி தலைவருமான என்.கே.கே.பெரியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, தற்போதைய ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளனர்.

ஆலங்குடி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு திமுக வேட்பாளர் டாக்டர் ஜி.சதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக அறந்தாங்கி ஒன்றியக்குழு தலை வரும், திமுக ஒன்றியச் செயலாள ருமான சிவ.வீ. மெய்யநாதனை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீரமங்கலம் மெய்நின்ற நாதர் கோயிலில் நக்கீரர் சிலையிடம் மெய்யநாதனின் ஆதரவாளர்கள் முறையிட்டு மனு அளித்தனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மு.க.முத்து வேட்பாளராக அறிவிக் கப்பட்டது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் திமுக நிர்வாகி கிரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x