Published : 17 Apr 2022 04:05 AM
Last Updated : 17 Apr 2022 04:05 AM

நீட் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க கல்வி, சுகாதாரம் மாநில கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: கபில் சிபல்

சென்னை

நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

ராகேஷ் (திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன்) சட்ட அறக்கட்டளை சார்பில், நீதி மற்றும் சமத்துவம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை கலைவானர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த ராகேஷ் படத்தை திறந்துவைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கில், என்.ஆர்.இளங்கோ எம்.பி. தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து மத்திய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:

பால் கொடுக்கும் பசுக்களை வெட்டக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அதை சில கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வயது முதிர்ந்த பசுக்களையும் வெட்ட அனுமதிப்பதில்லை.

தனக்குப் பயன்படாத நிலையில் உள்ள, வயது முதிர்ந்த பசுவை விற்று விவசாயி வருவாய் ஈட்டுவார். மாட்டின் தோல் வர்த்தகத்துக்குப் பயன்படும். காப்பகங்களில் இறக்கும் பசுக்கள் எதற்கும் பயன்படுவதில்லை. நாட்டில் சமூக அநீதி, பொருளாதார அநீதி, அரசியல் அநீதி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற, பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சியை மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் நெறிப்படுத்தினார்.

அப்போது நீட் தேர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த கபில் சிபல், "கல்வி மத்தியப் பட்டியலில் இருப்பதால்தான் நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட என்.ராம், "உங்கள் அமைச்சகம் தானே நீட் தேர்வை கொண்டு வந்தது?" என்று கேள்வி எழுப்பினார். "ஆனால் நாங்கள் அதை செயல்படுத்தவில்லை" என்று கபில் சிபல் பதில் அளித்தார்.

திமுக எம்.பி. வில்சன், ஆளுநரின் அதிகாரம் மற்றும் நீட் மசோதாவை ஆளுநர் நிறுத்திவைப்பது குறித்து கேட்டபோது, "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் காரணங்களுக்காக அதை தடுக்கக் கூடாது. ஆளுநருக்கு அளவான அதிகாரமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கான அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது" என்று கபில் சிபல் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ரவி, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x