

சிவகங்கை பகுதியில் வீடுக ளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதிய மின் இணைப்பு வேண்டுவோர், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். புதிய மின் இணைப்பு கோரும் வீடுகள், வணிக கட்டிடங்கள் மின் கம்பத்தில் இருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்படும். அதேபோல் புதைவட பகுதியாக இருந்தால், விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சிவகங்கை பகுதியில் விண்ணப்பித்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இணைப்பு கிடைக்கவில்லை என நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிரங்காலைச் சேர்ந்த என்.அருணகிரி கூறியதாவது: நான் வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு கேட்டு மார்ச் 31-ம் தேதி விண்ணப்பித்தேன். இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும், நேரடியாக விண்ணப்பிக்க வழியில்லை. தரகர் மூலமே விண்ணப்பிக்க முடிகிறது. இதனால் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
மின் கம்பத்துக்கும் எனது இடத்துக்கும் 100 அடி தான் இருக்கும். இருந்தபோதிலும் மின் இணைப்பு கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். இதுகுறித்து கேட்டால் மீட்டர் பெட்டி வரவில்லை, ஆளில்லை என்று சாக்கு போக்கு சொல்கின்றனர் என்றார்.