

கர்நாடக, மத்திய அரசைக் கண்டித்து ஓசூர் ஜூஜூவாடியில் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்கும் வகையில், ஒரு குழுவை நியமித்து, வாரத்துக்கு 2 நாள் வீதம் தொடர்ந்து வழக்கை நடத்தி, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்று ஜூலை 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 28-ம் தேதி கர்நாடகத்தில் விவசாய அமைப்புகள் திரண்டு, புதிய அணை கட்ட பூமி பூஜை நடத்தியுள்ளனர். கர்நாடக அரசே அம்மாநில விவசாயிகளைத் தூண்டிவிட்டு பூமி பூஜையை நடத்தியுள்ளது. எனவே, கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை அமைக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதியான, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜூஜூவாடியில் வரும் 12-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கவுள்ளோம் என்றார்.