

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், "இந்தத் தேர்தல் அறிக்கையில் 55 தலைப்புகளின் கீழ் தமிழகத்தில் எதிர்கொள்ளவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி எத்தகைய அணுகுமுறையை ஆட்சிமுறையில் கையாளவேண்டும் என்பதற்குக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகச்சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறோம்.
இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளில் நமது நிலை என்ன என்பதை மிகத்தெளிவாக அறுதியிட்டுக் கூறியிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்திருக்கிறது. எங்களது புதிய பார்வை தமிழக வாக்காளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்தத் தேர்தல் அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், முன்னணி அமைப்புகள், சொற்பொழிவாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தில் மிகப்பெருமளவில் பயன்படுத்தவேண்டும்.
2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்று மிகச்சிறப்பான கருத்துக்களைக் கூறி, இது அறிக்கை அல்ல, ஆவணம் என்று சொல்லுகிற அளவில் அமைவதற்குக் காரணமான குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என்றார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. ஊழலை ஒழிப்போம்; நல்லாட்சி அமைப்போம்
2. பூரண மது விலக்கை அமல்படுத்துவோம்
3. விவசாயக் கொள்கையை விரிவாக வகுப்போம்
4. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவோம்
5. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவோம்
6. மின் உற்பத்தியைப் பெருக்குவோம்
7. அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வோம்
8. உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்திடுவோம்
9. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்
10. நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்
11. சமூக நீதியைப் பாதுகாப்போம்
12. நீதித்துறையைச் சீரமைப்போம்
13. பொது சுகாதாரக் கொள்கையைப் புனரமைப்போம்
14. பொது விநியோக திட்டத்தைச் சீரமைப்போம்
15. சமூக நலக் கொள்கை விரிவாக்குவோம்
16. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன்
17. மீனவர் பிரச்சினைகளும் தீர்வுகளும்
18. தொழிலாளர் நலன்
19. அமைப்புச்சாரா தொழிலாளர் நலன்
20. நெசவாளர் நலன்
21. அரசு ஊழியர் - ஆசிரியர் - ஓய்வூதியர் நலன்
22. வணிகர் நலன்
23. மாற்றுத்திறனாளிகள் நலன்
24. சிறுபான்மையினர் நலன்
25. மகளிர் நலன்
26. முதியோர் நலன்
27. திருநங்கையர் நலன்
28. பால் உற்பத்தியாளர் - நுகர்வோர் நலன்
29. அரசு நிதிக் கொள்கையை மேம்படுத்துவோம்
30. காவல் துறையைச் சீரமைப்போம்
31. இந்துசமய அறநிலையத் துறையை மேம்படுத்துவோம்
32. போக்குவரத்துத் துறையில் சீர்திருத்தம் செய்வோம்
33. நுகர்வோர் நீதிமன்றங்களைச் செம்மைப்படுத்துவோம்
34. சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவோம்
35. சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணிக் காப்போம்
36. கூவம் சீரமைப்புத் திட்டம்
37. மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்
38. மரபு சாரா எரிசக்தியை ஊக்கப்படுத்துவோம்
39. காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா
40. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம்
41. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்
42. திரையரங்குகளில் கட்டணக் கொள்ளையைத் தடுத்திடுவோம்
43. தமிழ் வளர்ச்சி
44. நதிகளை இணைப்போம்
45. வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்
46. இலங்கைத் தமிழர் உரிமை காத்திடுவோம்
47. தகவல் அறியும் ஆணையத்தைச் சீரமைப்போம்
48. சேதுசமுத்திரத் திட்டம் ; சென்னை - மதுரவாயல் திட்டம்
49. இயற்கை பேரிடர் மேலாண்மையை உறுதிசெய்வோம்
50. கூட்டுறவு தேர்தல்
51. பொது நூலகத்துறையைச் சீரமைப்போம்
52. தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைப்போம்
53. பத்திரிகையாளர் நலன்
54. திரைப்படத்துறையைச் சீர்செய்வோம்
55. கிராமியக் கலை - ஜல்லிகட்டு
ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கவனிக்கத்தக்க சில வாக்குறுதிகள்:
* ப்ரீ கே.ஜி. முதல் பி.ஜி. வரை அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இலவசக் கல்வி வழங்கப்படும்.
* தமிழக மாணவர்கள் அனைவரும் ஒரு கட்டாயப் பாடமாகத் தமிழ்மொழியைக் கற்க அரசாணை பிறப்பிக்கப்படும்.
* தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும். சிறு, குறு தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்படும்.
* குடும்ப அட்டை கோருபவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் வழங்கவேண்டிய அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
* அரசு ஊழியர் நல வாரியம், காவலர் நல வாரியம் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள மீனவர் சமுதாயத்தினரைப் பழங்குடியினரின் பட்டியலில் சேர்க்க ஆவன செய்யப்படும்.
* மீன்பிடி தடை காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.150 வீதம் 40 நாள்களுக்கு ரூ.6,500 வழங்கப்படும்.
* ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் சொந்த வாகனம் வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆவன செய்யப்படும். வாடகை முறைகள் ஒழுங்குபடுத்தப்படும்.
* நெசவாளர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க கைத்தறி சந்தை அமைக்கப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதில் நிலவுகிற குறைபாடுகள் களையப்படும்.
* மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்த ஆவன செய்யப்படும்.
* திருநங்கையருக்கு அரசுப் பணிகளில் 2 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* கடந்த காலங்களில் தமிழக சட்டமன்ற விவாதங்களில் கரைபுரண்டோடிய கருத்து மோதல்களை நாளேடுகளில் படித்து அறிந்ததைப்போல, தொலைக்காட்சிகளின் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்து ஜனநாயகத்தைத் தழைக்கச்செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ்மொழியைக் கொண்டுவரப்படும்.
* இலங்கைத் தமிழர்களுக்குக் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நிறைவேற்றிய பல்வேறு நலத் திட்டடங்கள் மீண்டும் தொடர ஆவன செய்வோம்.
* தமிழக மக்களின் நீண்டகால கனவான சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம்.
* தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க ஆவன செய்வோம். இதில் திருநங்கைகள் மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.