Published : 17 Apr 2022 04:29 AM
Last Updated : 17 Apr 2022 04:29 AM

அரசியல் கட்சித் தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வேலூர் ஆர்.சி.சர்ச் சாலையில் உள்ள விண்ணேற்பு அன்னை பேராலயம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.

சென்னை: சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்த புனிதத் திருநாள், ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இயேசு உயிர்த்தெழுந்தார். துக்கத்தில் இருந்த உலகம் மீண்டது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்தப் புனித நாளில் சபதம் ஏற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர்வதற்கான நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட இந்த ஈஸ்டர் திருநாளில் நாம் உறுதியேற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கிறிஸ்தவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பறிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச்சிறந்த நற்பணிகளாக விளங்குகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்: இந்திய மண்ணில் சனாதன சக்திகளால் சகோதரத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் பெருந்தீங்கு சூழ்ந்துள்ளது. சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியரின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தீயவற்றை தள்ளி, நல்லவற்றை சேர்த்து வாழும் புதிய வாழ்வின்தொடக்கமாக ஈஸ்டர் அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழிகாட்டட்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர்சரத்குமார், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரும் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x