Published : 19 Apr 2016 08:17 AM
Last Updated : 19 Apr 2016 08:17 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டிவியை முடக்க சதி: காஞ்சி பிரச்சாரத்தில் ஜெ. குற்றச்சாட்டு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டிவியை முடக்க சதி செய்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். 5-வது நாளான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்- வாலாஜாபாத் சாலையில் உள்ள வாரணவாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 தொகுதி களின் வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி பேசியதாவது:

கேபிள் டிவி அரசுடைமையாக்கப் பட்டு குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது. தங்கள் குடும்ப நலனுக்காக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டிவியை முடக்க திமுக சதி செய்கிறது. கடந்த ஆட்சியில் சினிமா துறையை கபளீகரம் செய்தது திமுக.

அம்மா திட்டம், அம்மா உண வகம், குடிநீர், உப்பு, சிமென்ட் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இவற்றை கண்டு பொறுக்கமுடியாத கருணாநிதி யும், திமுகவினரும், 90 சதவீத வாக்கு றுதிகளை நிறைவேற்றவில்லை என் கின்றனர். நாங்கள் செய்த சாதனகளையும், திமுக ஆட்சியில் அனுபவித்த வேதனைகளையும் சிந்தித்து பார்த்து வாக்களியுங்கள். திமுக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்து, அதனால் 347 பேர் மாண்டனர் என்ற ஒரு வடிகட்டிய பொய்யை தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென்று தண்ணீர் திறக்கப்பட வில்லை. அடையாற்றுக்கு எங்கிருந் தெல்லாம் வெள்ள நீர் வருகிறது என்பது பற்றி பல முறை தெரிவித்தும், திமுகவினர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக மது விலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி கூறியுள்ளார். பூரண மது விலக்கு திமுகவின் கொள்கை என்றால், அதுபற்றி தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட் டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்த சட்டம் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர். அதில் ‘பூரண’ என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ‘மதுபான விற்பனையில் இருந்து அரசு முற்றிலும் விலகும். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் கலைக்கப்படும்’ என்று கூறி தனியார் மூலம், கிளப்புகள் மூலம் மதுபானம் விற்க சூழ்ச்சி செய்துள்ளனர். எனவே, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கும், திமுக வுக்கும் கிடையாது என்பது புரியும்.

அதிமுக அரசு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x