

கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி மங்கல நாண், முத்து கிரீடத்துடன் சிலம்பு நாயகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்குதொடர்ச்சி மலை விண்ணேற்றி பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பளியன்குடி வழியே நடந்தும், குமுளி வண்டிப்பாதை வழியே ஜீப்களிலும் ஏராளமான பக்தர்கள் சென்றனர். மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மலர் வழிபாடுடன் தொடங்கிய விழாவில் காலை 6 மணிக்கு யாக பூஜை, 6.30 மணிக்கு மங்கல இசை, 7.30 மணிக்கு பொங்கல் வைத்தல், திருவிளக்கு வழிபாடு நடைபெற்றன. அம்மன் பச்சைப்பட்டு உடுத்தி கையில் சிலம்புடன் அருள்பாலித்தார். மங்கலநாண், முத்து கிரீடம் உள்ளிட்ட அலங்காரத்துடன் கண்ணகி காட்சியளித்தார்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் பொங்கல் வைத்து வளையல் காணிக்கை அளித்தனர். மாலை வரை அட்சய பாத்திரத்தில் அன்னதானமும், அவல் பிரசாதமும் வழங்கப்பட்டன. நாட்டுப்புறப் பாடல்கள், திருவிளக்கு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவையொட்டி பளியன்குடி, குமுளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு குடிநீர், உப்புக்கரைசல், நன்னாரி, காசினி சர்பத், அத்திப்பழச் சாறு வழங்கப்பட்டன. மருத்துவத் துறை சார்பில் உடல்வலி நீக்கும் மாத்திரை, தைலம் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மழை பெய்ததால் இதமான காலநிலை நிலவியது.
பத்திரிகையாளர்கள் போராட்டம்
கண்ணகி கோயில் விழாவில் பங்கேற்க தேனியில் இருந்து செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தில் செய்தியாளர்கள் தேக்கடி வழியே கோயிலுக்குச் சென்றனர். அதற்குப் பின்னால் கம்பம், பாளையம் பகுதி செய்தியாளர்கள் தனி வாகனங்களில் சென்றனர்.
இவர்களை மலையடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கேரள வனச்சரகர் அகில்பாபு தலைமையிலான ஊழியர்கள் தடுத்து பிரத்தியேக அடையாள அட்டைகளை கேட்டனர். ஆனால் தேனி மாவட்டத்தில் யாருக்கும் இவை வழங்கப்படவில்லை என்று பத்திரிகையாளர்கள் கூறினர். அதை வனத்துறையினர் ஏற்காததால், இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சிறிதுநேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர், தேனி ஆட்சியரிடம் புகார் தெரிவித்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்துக்கு முல்லை பெரியாறு 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.