Published : 16 Apr 2022 08:32 PM
Last Updated : 16 Apr 2022 08:32 PM

மதுரை சித்திரைத் திருவிழா வரலாற்றில் முதல் நெரிசல் விபத்து: பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடிகள் காரணமா?

படங்கள்: ஜி.மூர்த்தி

மதுரை: ஆயிரக்கணக்கானோர் கூடும் மதுரை சித்திரைத் திருவிழாவில் வரலாற்றில் இதுவரை நடந்திராத நிகழ்வாக கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் இறந்திருப்பதற்கு காரணம், விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குளறுபடிகளா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரைத் திருவிழா, கோயில் வளாகத்தில் உள்விழாக்களாக நடத்தப்பட்டன. விழாவிற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கள்ளழகருக்காக விரதம் இருந்து ஆண்டுதோறும் வைகை ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இரண்டு ஆண்டிற்கு பின்னர் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக தொடங்கி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பிரசித்திப்பெற்ற நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடந்தது. பக்தர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளில், மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 4,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க தேவையான முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்து இருந்தனர்.

சித்திரைத் திருவிழாவில் வழக்கமாக கள்ளழகர், சாலை உள்ளிட்ட திறந்த வெளியில் மட்டுமே வீதி உலா வருவது வழக்கம். அதனால், இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு பக்தர்கள் திரண்டாலும் விபத்து ஏற்படும் அளவிற்கு நெரிசல் எப்போது ஏற்பட்டது கிடையாது. அப்படியே பெரும் கூட்டம் குறிப்பிட்ட இடங்களில் திரண்டாலும் அந்த இடங்களை கள்ளழகர் கடந்த சில விநாடிகளிலே நிலைமை சரியாகிவிடும். இந்த முறைதான் சித்திரைத் திருவிழா வரலாற்றிலே முதல் முறையாக கூட்ட நெரிசல் காரணமாக, 2 பக்தர்கள் உயிரிழந்திருக்கும் அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதத்திற்கு பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடியும், கவனக் குறைவுமே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள், அரசு அலுவலர்கள் கூறியது: "கடந்த காலங்களில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திலும், அருகில் உள்ள ஏ.வி.மேம்பாலத்திலும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவா்கள். இதற்கென தனி ‘பாஸ்’ மாநகர காவல்துறை மூலம் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு அருகில் தனியாக ஒரு இடத்தை ஒதுங்கி அங்கு முக்கிய பிரமுகர்கள், காரில் நேரடியாக செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விஐபி பாஸ் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வருவதற்கு வசதியாக ஏவி மேம்பாலம் அருகே மூங்கில் கடை தெரு சாலையை போலீஸார் முழுமையாக அடைத்துவிட்டனர். இதுவரை நடந்த திருவிழாக்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த மூங்கில் கடை தெரு வழியாகதான் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றிற்கு செல்வார். அவரது வாகனத்திற்கு பின்னாலே பல ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆற்றுப்பகுதிக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இன்று வழக்கத்திற்கு மாறாக மூங்கில் கடை தெருவில் கள்ளழகர் வாகனத்திற்கு மட்டும் வழிவிட்டுவிட்டு பக்தர்கள் செல்லாதபடி போலீஸார் அந்த பாதையை அடைத்துவிட்டனர்.

இதனால், கோரிப்பாளையம் தேவர் சிலையை கள்ளழகர் கடந்ததும் அங்கு கூடியிருந்த பல ஆயிரம் பக்தர்கள் ஆற்றிற்கு செல்ல வழி தேடினர். ஆனால், அரசு மருத்துவமனை, பனகல் சாலை, கோரிப்பாளையம் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் மூங்கில் கடை தெரு வழியாக ஆற்றிற்கு செல்ல முடியவில்லை. எப்படியும் வைகை ஆற்றுக்கு செல்ல வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் பக்தர்கள் முண்டியடித்தனர். இந்தக் கூட்டம், பாலம் ஸ்டேஷன் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையை நோக்கி முன்னேறியது. இந்த சாலைகளில் ஏற்கனவே கடுமையான கூட்டம் திரண்டிந்தது. இந்தக் கூட்டத்திற்குள் பனங்கல் சாலை, கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வந்தவர்களும் நுழைந்ததால் அங்கு கடுமையான நெரிசல் உருவானது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் நெரிசலில் சிக்கி கதறினர். தடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது கூட்டத்தினர் மிதித்து சென்றனர். பலர் மூச்சுவிட முடியாமல் மயக்கமடைந்து சரிந்தனர்.

சுமார் 20 நிமிடத்திற்கு மேல் நீடித்த இந்த கடும் நெரிசலில் பலரும் சிக்கினர். அவர்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரல் விட்டது மிக பரிதாபமாக இருந்தது. போலீஸார், தீயணைப்பு படை வீரர்களால் உடனடியாக நெரிசல் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல முடியவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைத்தனர். சிலருக்கு அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலர் மூச்சுத்திணறல் சரியாகியதும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மயமக்கமடைந்த 10 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சித்திரைத் திருவிழா நேரத்தில் மூங்கில் கடை தெரு, மீனாட்சி கல்லூரி சாலை வழியாக எப்போதும் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று வரும் வரும் வகையிலே இருக்கும். அதனால், கோரிப்பாளையத்தில் நெரிசல் இருக்காது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மூங்கில் கடை தெரு சாலையை போலீஸார் அடைத்ததாலே இந்த நெரிசல் ஏற்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவு சென்றதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று இந்த ஆண்டு முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரை மாவட்டத்தில் நல்லமழை பெய்தது. மழை அளவைக் கணக்கீட்டு தண்ணீர் திறப்பை சரியான விகிதத்தில் தண்ணீரை பொதுப்பணித்துறை திறந்திருந்தால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளில் குறைந்த அளவே தண்ணீர் ஆற்றில் வந்திருக்கும். இதனை பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகம் கணிக்க தவறிவிட்டநிலையில் பக்தர்களுக்கு தடை போட்டது. இதுவே கோரிப்பாளையம் நெரிசலுக்கு முக்கிய காரணமாகிவிட்டது.

மேலும், வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதி அருகேயே தற்போது தடுப்பணை கட்டியதால் விபத்தை தவிர்க்க பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை போலீஸாருக்கு உண்டாகிவிட்டது. இந்த தடுப்பணையை யானைக்கல் பாலத்திற்கும் மேற்குப்பகுதியிலே அமைத்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. வைகை ஆற்றின் இரு புறமும் மிக அகலமான நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல லட்சம் பக்தர்கள் நெரிசல் இன்றி கள்ளழகரை தரிக்க முடியும். ஆனால், ஆற்றுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் கோரிப்பாளையத்தில் கூடுதல் நெரிசல் ஏற்படுவதற்கு வழிவகுத்தது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x