Last Updated : 16 Apr, 2022 05:10 PM

 

Published : 16 Apr 2022 05:10 PM
Last Updated : 16 Apr 2022 05:10 PM

'சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை... டம்மி முதல்வராக ரங்கசாமி' - நாராயணசாமி விமர்சனம்

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: 'தற்போது ஆளுநர் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர், தலையாட்டி பொம்மையாக ரங்கசாமி இருக்கிறார்' என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்ப பெற வேண்டும், புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் இன்று (ஏப்.16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறியது: "புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி, இங்கு வந்து வேலையை முடித்தார். அதன்பிறகு, தேர்தலின்போது முதல்வர் ரங்கசாமியை மிரட்டி கூட்டணி அமைத்து, காங்கிரஸில் இருந்து விலகி சென்ற 6 பேரை வைத்து பண பலம், அதிகார பாலத்துடன் என்ஆர் காங்கிரஸில் 10, பாஜக-வில் 6 என 16 பேர் வெற்றி பெற்று இப்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். தற்போது ஆளுநர் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர். தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் சொன்னார். நிதியை வாரி வழங்குவோம், கடனை தள்ளுபடி செய்வோம், மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று அமித் ஷா சொன்னார். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

நான் முதல்வராக இருந்தபோது 10 சதவீதம் நிதியை மத்தியில் இருந்து அதிகமாக பெற்றேன். இப்போது கூடுதலாக 1.4 சதவீதம் நிதியைதான் மத்திய அரசிடமிருந்து ரங்கசாமியால் பெற முடிந்தது. இதுதான் புதுச்சேரி மாநிலத்தின் அவலநிலை. புதுச்சேரியில் ஊழலை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

கர்நாடகாவில் உள்ள பாஜக அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள் 30 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு 10 சதவீதம்தான் வித்தியாசம். இப்படிப்பட்ட ஒரு ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் நாற்காலியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். தமிழிசை சவுந்தரராஜன் சூப்பர் முதல்வராக இருந்து அரசின் அனைத்து நிகழ்வுகளிலும் தலையிட்டு வருகிறார்கள்.

எதற்காக நாங்கள் கிரண்பேடியை எதிர்த்து போராடினோமோ, அதை முழுமையாக தமிழிசையிடம் ரங்கசாமி விட்டுவிட்டு சரணாகதி அடைந்துள்ளார். மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும். தமிழிசையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x