என்எம்டி முதல் ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் வரை: சென்னையின் முக்கிய சாலைகள் 'ஸ்மார்ட்'டாக மாறப்போவது எப்படி?

என்எம்டி முதல் ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் வரை: சென்னையின் முக்கிய சாலைகள் 'ஸ்மார்ட்'டாக மாறப்போவது எப்படி?
Updated on
2 min read

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் என்எம்டி, ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் சாலையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகளும் அதிகரித்தக் கொண்டே உள்ளன. மேலும், வானகங்களில் இருந்து வரும் புகையால் காற்று மாசும் அதிகரிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பொதுப் போக்குவரத்தை அதிக அளவு பயன்படுத்துவது, சைக்கிள் உள்ளிட்ட இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்களைச் செயல்படுத்துவது, மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இதற்கு ஏற்ற வகையில் பல்வேறு உலக நாடுகளின் சாலைகள் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றன.

இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து பெருநகரங்களில் உள்ள சாலைகளை மறுசீமைரப்பு செய்து, நவீன போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்ற சாலையாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்படி அனைத்து மாநிலங்களும் நகரப்புறங்களில் உள்ள சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மறு சீரமைப்பு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள மிக முக்கிய சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி ஜிஎஸ்டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை என்று அழைக்கப்படும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் சாலை, கிராண்ட் நார்தன் டிரங்க் சாலை என்று மூன்று சாலைகளில் 103 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஸ்மார்ட் சாலைகளாக மாற்றியமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சைக்கிள் பாதை:

சென்னை பெருநகரங்களில் தற்போது சைக்கிள் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் சைக்கிள் செல்லும் அளவுக்கு சாலைகள் முறையாக இல்லை. எனவே, வெளிநாடுகளில் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு என்று தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையிலும் இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின்படி இந்த சாலைகள் அனைத்திலும் தனியாக சைக்கிள் செல்வதற்கு பாதை அமைக்கப்படவுள்ளது.

கடைசி நேர இணைப்பு சேவை

நகரத்தின் முக்கியப் பகுதிகளுக்கு எந்த நேரத்திலும் செல்ல பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதுதான் கடைசி நேர இணைப்பு சேவை. இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அனைத்தும் ஓர் இடத்தில் இருக்கும் வகையில் முனையங்கள் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் இந்த முனையங்களுக்கு வந்தால் நகரின் எந்தப் பகுதிகளுக்கு வேண்டும் என்றாலும் பொதுப் போக்குவரத்து மூலம் செல்ல முடியும்.

ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர்

சாலைகளுக்குச் செல்லும் வழியில் உள்ள பொது இடங்களைப் பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு, முக்கிய இடங்களில் பூங்காக்கள், பாலங்களின் கீழ் பகுதிகளை அழகுபடுத்துதல், சாலைகளில் இரு பகுதிகளைச் சீரமைப்பது மூலம் பொதுமக்கள் அமர்ந்து பொழுதைக் கழிக்கு வகையில் ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு செய்தால் பொதுமக்களின் சாலைப் பயணத்தை ஓர் இனிய பயணமாக மாற்ற முடியும் என்று நகரமைப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலைப் பாதுகாப்பு

2019-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் பெருநகரமாக சென்னை உள்ளது. மரண சாலையாக மாறி வரும் சென்னை சாலைகளை விபத்துகள் இல்லாத சாலையாக மாற்றும் வகையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு இந்திய சாலை காங்கிரஸ் வெளியிட்டுள்ள விதிகளின் அடிப்படையில் அனைத்து சாலைகளும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு சென்னையில் உள்ள சாலைகளை வருங்காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்தத் திட்டங்கள் 100 சதவீதம் வெற்றி பெறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in