Published : 16 Apr 2022 05:01 AM
Last Updated : 16 Apr 2022 05:01 AM
சென்னை: இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படும் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தர வேண்டும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமரை நான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது என்று தெரிவித்தேன்.
மேலும் கடந்த 7-ம் தேதி தங்களுடன் தொலைபேசியில் உரையாடியபோது, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு தாங்கள், “இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து அதற்குப் பிறகு இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம்’’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவித்தீர்கள்.
உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் அனுப்புவதற்கு தமிழக அரசு உறுதியோடு உள்ளது.
எனவே, இலங்கையில் நிலவும் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, பொருட்களை அனுப்புவதற்கான வசதியை விரைவில் செய்து தரவேண்டும்.
மீனவர்கள் விடுதலை
அதேபோல், கடந்த மாதம் 23-ம் தேதி 12 இந்திய மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மீனவர்களால் இவ்வளவு பெரியதொகையை செலுத்த முடியாததால், வரும் மே 12 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ உதவிகளை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்து, மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
மண்டபம் முகாமில் தங்க வைப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழகத்தை நோக்கி இலங்கைத் தமிழர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி கைக்குழந்தை உட்பட 16 பேர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். முதல்வர் வழிகாட்டுதலின்படி, அவ்வாறு வரும் இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அரவணைக்க வேண்டியது நமது கடமை என்றும், தற்போது இலங்கையில் உள்ள அசாதாரண சூழ்நிலையில், இந்தியாவுக்கு வரும் இலங்கை தமிழர்களுக்கும், ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல தற்காலிகப் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
காணொலியில் உரையாடல்
இதுவரை 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் காணொலிக் காட்சி மூலம் அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்து விசாரித்தார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT