Last Updated : 09 Apr, 2016 06:12 PM

 

Published : 09 Apr 2016 06:12 PM
Last Updated : 09 Apr 2016 06:12 PM

சூடுபிடிக்கிறது திருச்செந்தூர் தேர்தல் களம்: 4 முறை வென்ற அனிதாவின் சவாலை சமாளிப்பாரா சரத்குமார்?

திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியதையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சவாலை சரத்குமார் சமாளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில், சரத்குமார் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் தென்காசி தொகுதியில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்து வந்தார். அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமத்துவ மக்கள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு தேர்தல் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

சரத்குமார் வருகை

அக்கட்சியினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கினர். கட்சியின் தலைவரும், வேட்பாளரு மான சரத்குமார் இன்று திருச் செந்தூர் வருகிறார்.

தேர்தல் பணி தொடர்பாக கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஆலோ சனை நடத்தும் சரத்குமார், கட்சியின் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

களப்பணியில் அனிதா

திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி, ஆதரவு திரட்டி வருகிறார்.

இத்தொகுதி 2009 இடைத்தேர்தல் உட்பட இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 6 முறை திமுக வென்றுள்ளது. அதிமுக 6 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

4 முறை வெற்றி

கடந்த 2011 தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக அமோக வெற்றிபெற்ற போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றிய நிலையிலும், திருச்செந்தூர் தொகுதியில் திமுக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கடந்த 2001, 2006-ல் அதிமுக சார்பிலும், 2009 இடைத்தேர்தல் மற்றும் 2011 தேர்தலில் திமுக சார்பிலும் அவரே வெற்றி பெற்றுள்ளார்.

சாதகம், பாதகம்

அதே நம்பிக்கையில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2001 முதல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியிருக்கிறார். அந்த திட்டங்கள், காங்கிரஸ் கூட்டணி, காயல்பட்டினம் இஸ்லாமிய வாக்குகள் போன்றவை அவருக்கு வெற்றியை எளிதில் பெற்றுத்தரும் என, அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கடந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் அக்கட்சிக்கென கணிசமான வாக்குகள் உள்ளன. அது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது தொகுதி மக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சரத்குமாருக்கு பலம்

சரத்குமாரை பொறுத்தவரை திருச்செந்தூர் தொகுதியில் முதல் முறையாக போட்டி யிடுகிறார். அனிதா ராதாகிரு ஷ்ணன் 3 மாதங்களுக்கு முன்பே வாக்காளர்களை தயார்படுத்தி யுள்ள நிலையில், சரத்குமார் இனிமேல் தான் அந்த பணிகளை செய்ய வேண்டும்.

பிரபலமான நடிகர் என்பதாலும், தென்மாவட்ட மக்கள் மத்தியில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்பதாலும் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் அவருக்கு கடினம் எதுவும் இருக்காது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே இருந்து வந்துள்ளது. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கூட இரு முறை அதிமுக சார்பில் தான் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் சரத்குமாருக்கு கூடுதல் பலம்.

இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி திருச்செந்தூர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்த ஒரு தொகுதியையே குறிவைத்து வேலை செய்வார்கள். மேலும், இந்த தொகுதியில் கணிசமாக உள்ள அதிமுக ஆதரவு மீனவர் ஓட்டுகளும் சரத்குமாருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வெற்றி கடும் சவால்

மக்கள் நலக்கூட்டணியை பொறுத்தவரை இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், பாஜக சார்பிலும் திருச்செந்தூர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக வுக்கும் திருச்செந்தூர் தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது.

எனவே, திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை. மிகக் கடினமாக வேலை செய்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்பது மட்டும் உண்மை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x