Published : 16 Apr 2022 06:38 AM
Last Updated : 16 Apr 2022 06:38 AM

கோவையில் சேதமடைந்த சாலைகளைக் கண்டறிய மாநகராட்சி அறிமுகம் செய்த வாட்ஸ் அப்: 4 நாட்களில் 1300 புகார்கள்

கோவை: கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.

ஏற்கெனவே மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி சிறப்பு நிதியாக அரசால் ஒதுக்கப்பட்டது. சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில்,மிக மோசமாக உள்ள சாலைகளை கண்டறிந்து, அவற்றில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை புகைப்படம் எடுத்து, அதனை மாநகராட்சியின் பிரத்யேகமான 8147684653 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என கடந்த 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், சாலை சேதமடைந்துள்ள பகுதியை எளிதாக அணுகும் வகையில் ஜி.பி.எஸ். மூலம் இருப்பிடத்தையும் பகிர தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர். நேற்று வரை 1,300 பேர் இவ்வாறு புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சாலைகளில் உள்ள குழிகளை சீரமைக்க (பேட்ஜ் ஒர்க்) புதிய முயற்சியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x