மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சொத்து வரி குறைவு; பாஜக ஆளும் மாநிலங்களிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் நேரு கருத்து
சேலம்: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வரி உயர்வு குறைவு என்றும், பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்வு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வரி உயர்வு சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்ததை விட குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வரி உயர்வு குறைவு.
மக்களின் திட்டங்களுக்காக வரி விதிக்கப்படுகிறது. 83 சதவீதம் மக்களுக்கு 25 முதல் 50 சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. வியாபாரம் மற்றும் வணிக நோக்குடன் உள்ள கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்களுக்குத்தான் 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் 1.7 சதவீதம் பேருக்கு 200 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வரி உயர்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் கட்சியினர் தான் இதை பெரிதாக்குகின்றனர்.
15 மாநிலங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு மக்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது.
ரூ.98 கோடி மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தற்போது கொங்கு மண்டலத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும், என்றார்.
பேட்டியின்போது, எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்
சேலத்தில் நடந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியதாவது:
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு வாரமும் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் தேவைகளை அறிந்து வேளாண் இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை வழங்கிட வேண்டும். சுகாதாரத்துறை தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ், மேட்டூர் சார் ஆட்சியர் வீர்.பிரதாப் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம. அபிநவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
