

திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வைகோவின் சீடர் என்பதால், அவரைப் போலவே நன்றாக பேசுவார். எனக்கு அவ்வளவாக பேசவராது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்களை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவோம். தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினைதான் அதிகம். ஜெயலலிதாவுக்குத்தான் கதை சொல்ல தெரியுமா. நானும் கதை சொல்வேன். ‘பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என ஒருவர் சாமியாரிடம் நிறைய தங்கம் கேட்டார். அதற்கு சாமியார் 100 கற்களை வழங்கினார். இதில் ஏதோ ஒருகல்லில் தங்கம் உள்ளது. உடைத்து எடுத்துக்கொள் என்றார்.
அவனும் உடைத்தான். 99 கல்லை உடைத்தும் தங்கம் கிடைக்கவில்லை. இனிமேல்தான் தங்கம் கிடைக்கப்போகிறதா என அந்த கல்லை தூக்கி எறிந்துவிட்டு சென்றான். அதற்கு சாமியார் கூறினார், உனக்கு தங்கத்தின் மீது ஆசை குறைய வேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்தேன் என்றார். அதேபோல் தான் அதிமுகவும், திமுகவும். நீங்கள் கல்லைபோல் இருவரையும் தூக்கி எறிவீர்களா?’.
தமாகாவில் இருந்து பீட்டர் அல்போன்ஸ் விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவர், காங்கிரஸில் இருந்தால் என்ன, திமுகவில் இருந்தால் என்ன. காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறாது. ஏனென்றால், கெயில் திட்டம், மீத்தேன் திட்டங்களுக்கு கையெழுத்திட்டது அவர்கள்தான். அதனால், நிச்சயம் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.
குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற் காக கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் என்னவானது? எனக்கு வைகோவை போல் அழகாக தமிழ் பேசத் தெரியாது என்று விஜயகாந்த் பேசினார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.